Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, January 16, 2023

சனவரி 17 : முதல் வாசகம்எதிர்நோக்கே உள்ளத்திற்குப் பாதுகாப்பானது; உறுதியான நங்கூரம் போன்றது.எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 6: 10-20

சனவரி 17 :  முதல் வாசகம்

எதிர்நோக்கே உள்ளத்திற்குப் பாதுகாப்பானது; உறுதியான நங்கூரம் போன்றது.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 6: 10-20
சகோதரர் சகோதரிகளே,

கடவுள் நீதியற்றவர் அல்ல. இறைமக்களுக்கு நீங்கள் முன்பு தொண்டாற்றி வந்தீர்கள்; இப்போதும் தொண்டு செய்து வருகின்றீர்கள். எனவே கடவுள் பெயரால் நீங்கள் காட்டிய அன்பையும் உழைப்பையும் அவர் மறக்கமாட்டார். நீங்கள் எதிர்நோக்குவது முழு உறுதி பெறும் பொருட்டு, உங்களுள் ஒவ்வொருவரும் முன்பு காட்டிய அதே ஆர்வத்தையே இறுதிவரை காட்டவேண்டும் என மிகவும் விரும்புகிறோம். இவ்வாறு நீங்கள், தளர்ச்சிக்கு இடம் கொடாமல், நம்பிக்கையாலும் பொறுமையாலும் இறைவாக்குறுதிகளை உரிமைப் பேறாகப் பெற்றவர்களைப்போல் வாழுங்கள்.

ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி அளித்தபோது, தம்மைவிடப் பெரியவர் எவர் பெயராலும் ஆணையிட்டுக் கூற இயலாததால், தம்மீதே ஆணையிட்டு, “நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்” என்றார். இதன்படி அவரும் பொறுமையோடு காத்திருந்து, பின் கடவுள் வாக்களித்ததைப் பெற்றுக்கொண்டார். தங்களைவிடப் பெரியவர் ஒருவர் பெயரால்தான் மக்கள் ஆணையிடுவர். எல்லாச் சச்சரவுகளிலும் ஆணையிட்டே முடிவு கட்டுவர். அம்முடிவை ஆணை உறுதிப்படுத்தும்.

அவ்வாறே, கடவுளும் தம் வாக்குறுதியை உரிமைப்பேறாகப் பெற்றோருக்குத் தம் திட்டத்தின் மாறாத் தன்மையை மிகவும் தெளிவாகக் காட்ட விரும்பி, ஓர் ஆணையால் தம் வாக்கை உறுதிப்படுத்தினார். மாறாத் தன்மையுடைய இவை இரண்டையும் பொறுத்த வரையில் கடவுள் உரைத்தது பொய்யாயிருக்க முடியாது. அடைக்கலம் தேடும் நாம், நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை விடாமல் பற்றிக்கொள்வதற்குத் தளரா ஊக்கம் கொண்டிருக்கவேண்டும். இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்திற்குப் பாதுகாப்பான, உறுதியான நங்கூரம் போன்றுள்ளது. இது கோவிலின் திரைச்சீலைக்கு அப்பால் சென்று சேர்ந்திருக்கிறது. நமக்கு முன்னோடியாய் அந்தத் திரைச்சீலையைக் கடந்து இயேசு அங்குச் சென்று சேர்ந்திருக்கிறார். மெல்கிசதேக்கு முறைப்படி என்றென்றும் தலைமைக் குரு என்னும் நிலையில் நம் சார்பாக அவர் அங்குச் சென்றிருக்கிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment