பிப்ரவரி 19 : இரண்டாம் வாசகம்
நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 16-23
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.
எவரும் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக்கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, “ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பார்.” மேலும் “ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார்.”
எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா ஆகிய அனைவரும் உங்களுக்கு உரியவர்களே. அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்கு உரியவைகளே. ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
1 யோவா 2: 5
அல்லேலூயா, அல்லேலூயா!
கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. அல்லேலூயா.
No comments:
Post a Comment