ஜூலை 6 : முதல் வாசகம்
நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-19
அந்நாள்களில்
கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் ‘இதோ! அடியேன்’ என்றார். அவர், “உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப் பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரிபலியாக அவனை நீ பலியிட வேண்டும்” என்றார்.
அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு, எரிபலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டியபின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார். உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, “நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்” என்றார்.
பின் ஆபிரகாம் எரிபலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின்மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக்கொண்டார். இவ்வாறு இருவரும் சேர்ந்து சென்றனர். அப்பொழுது, ஈசாக்கு தன் தந்தையாகிய ஆபிரகாமை நோக்கி, ‘அப்பா!’ என, அவர், ‘என்ன? மகனே!’ என்று கேட்டார். அதற்கு அவன், “இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக் குட்டி எங்கே?” என்று வினவினான். அதற்கு ஆபிரகாம், “எரிபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பொறுத்தமட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே” என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர்.
ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து, அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின்மீது இருந்த விறகுக் கட்டைகளின்மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையில் எடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ‘ஆபிரகாம்! ஆபிரகாம்’ என்று கூப்பிட, அவர் ‘இதோ! அடியேன்’ என்றார். அவர், “பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்” என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்து தம் மகனுக்குப் பதிலாக எரிபலியாக்கினார். எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு ‘யாவேயிரே’ என்று பெயரிட்டார். ஆதலால்தான் ‘மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்’ என்று இன்றுவரை வழங்கி வருகிறது.
ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, “ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து, விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவி கொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்” என்றார்.
பின் ஆபிரகாம் தம் வேலைக்காரரிடம் திரும்பி வந்தார். அவர்கள் ஒன்று சேர்ந்து பெயேர்செபாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கேயே ஆபிரகாம் வாழ்ந்து வந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment