சனவரி 11 : முதல் வாசகம்
நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21
அன்பார்ந்தவர்களே,
நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை. நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும். எனவே, நாம் அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம் என்னும் உறுதி நமக்கு உண்டு.
பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்யவேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார். சாவுக்குரிய பாவமும் உண்டு. அப்பாவத்தைச் செய்வோருக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என நான் சொல்லவில்லை. தீச்செயல் அனைத்துமே பாவம். ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல.
கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர்களை அவர் பாதுகாக்கிறார். தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை. நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; ஆனால், உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும்.
இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்துகொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு.
பிள்ளைகளே, சிலைவழிபாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment