செப்டம்பர் 10 : முதல் வாசகம்
நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 14-22
என் அன்பிற்குரியவர்களே, சிலைவழிபாட்டைவிட்டு விலகுங்கள். உங்களை அறிவாளிகள் என மதித்துப் பேசுகிறேன். நான் சொல்வதைக் குறித்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்.
இஸ்ரயேல் மக்களின் சடங்கு முறைகளைப் பாருங்கள். பலிப் பொருள்களை உண்கிறவர்கள் பலிக்குப் படைக்கப்பட்ட பலிபீடம் குறிக்கும் கடவுளோடு உறவு கொள்ளவில்லையா?
எனவே சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை அல்லது சிலைகளைப் பொருட்படுத்த வேண்டும் என்றா சொல்லுகிறேன்? மாறாக, சிலைகளுக்குப் பலியிடப்பட்டவை கடவுளுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடப்பட்டவையாகும். நீங்கள் பேய்களோடு உறவு கொள்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்குகொள்ள முடியாது. நாம் ஆண்டவருக்கு எரிச்சல் ஊட்டலாமா? நாம் அவரைவிட வலிமைமிக்கவர்களா?
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment