செப்டம்பர் 10 : நற்செய்தி வாசகம்
நான் சொல்பவற்றைச் செய்யாது, என்னை `ஆண்டவரே, ஆண்டவரே' என ஏன் கூப்பிடுகிறீர்கள்?
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 43-49
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.
நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்? என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்.
அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின்மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.
நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தளம் இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது; அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment