பிப்ரவரி 6 : முதல் வாசகம்
தாவீது முழு உள்ளத்தோடு ஆண்டவரைப் புகழ்ந்தார்; தம்மைப் படைத்தவர்மீது அன்பு செலுத்தினார்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 47: 2-11.
நல்லுறவுப் பலியிலிருந்து கொழுப்பு பிரிக்கப்படுவதுபோல், இஸ்ரயேல் மக்களிடமிருந்து தாவீது தெரிந்துகொள்ளப்பெற்றார். வெள்ளாடுகளுடன் விளையாடுவது போலச் சிங்கங்களுடன் விளையாடினார்; செம்மறி ஆடுகளுடன் விளையாடுவது போலக் கரடிகளுடன் விளையாடினார். பெருமை பாராட்டிய கோலியாத்தை நோக்கி இளைஞர் தாவீது தம் கைகளை ஓங்கிக் கவண் கல்லை வீசியபோது ஓர் அரக்கனைக் கொல்லவில்லையா? அதனால் மக்களது இழிநிலையை அகற்றவில்லையா? வலிமைமிக்க மனிதனைப் போரில் கொன்று தம் மக்களின் வலிமையை உயர்த்த உன்னத இறைவனாகிய ஆண்டவரை அவர் துணைக்கு அழைத்தார்; ஆண்டவரும் அவருடைய வலக்கைக்கு வலிமையூட்டினார். இவ்வாறு அவர் முறியடித்த பத்தாயிரம் பேருக்காக மக்கள் அவரை மாட்சிமைப்படுத்தினர்; ஆண்டவருடைய ஆசிகளுக்காக அவரைப் புகழ்ந்தனர்; மாட்சியின் மணிமுடியை அவருக்குச் சூட்டினர். எப்புறமும் அவர் பகைவர்களைத் துடைத்தழித்தார்; எதிரிகளான பெலிஸ்தியரை அடக்கி ஒழித்தார்; அவர்களுடைய வலிமையை அறவே நசுக்கினார். தம் எல்லாச் செயல்களிலும் மாட்சியைச் சாற்றும் சொற்களால் உன்னத இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்; தம் முழு உள்ளத்தோடும் புகழ்ப்பா இசைத்தார்; தம்மைப் படைத்தவர்மீது அன்பு செலுத்தினார். தங்களுடைய குரலால் இன்னிசை எழுப்பப் பாடகர்களைப் பலிபீடத்திற்குமுன் நிற்கச் செய்தார். திருவிழாக்களைச் சீரோடும் சிறப்போடும் கொண்டாடச் செய்தார்; ஆண்டவருடைய திருப்பெயரை அவர்கள் புகழ்ந்து பாடுவதால் திருவிடம் வைகறையிலிருந்து எதிரொலிக்கும்படி ஆண்டு முழுவதும் காலங்களைக் குறித்தார். ஆண்டவர் அவருடைய பாவங்களை நீக்கினார்; அவருடைய வலிமையை என்றென்றைக்கும் உயர்த்தினார்; மன்னர்களின் உடன்படிக்கையையும் இஸ்ரயேலில் மாட்சியின் அரியணையையும் அவருக்குக் கொடுத்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக