Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, May 24, 2022

மே 25 : முதல் வாசகம்நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 17: 15, 22- 18: 1

மே 25 :  முதல் வாசகம்

நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 17: 15, 22- 18: 1
அந்நாள்களில்

பவுலுடன் சென்றவர்கள் அவரை ஏதென்சு வரை அழைத்துச் சென்றார்கள். சீலாவும் திமொத்தேயுவும் விரைவில் வந்து சேரவேண்டும் என்னும் கட்டளையைப் பவுலிடமிருந்து பெற்றுக்கொண்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று கூறியது: “ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன். நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப் பார்த்துக்கொண்டு வந்தபோது ‘அறியாத தெய்வத்துக்கு’ என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக் கண்டேன். நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர். மனிதர் கையால் கட்டிய திருக்கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை. அனைவருக்கும் உயிரையும் மூச்சையும் மற்றனைத்தையும் கொடுப்பவர் அவரே. எனவே மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்குத் தேவையில்லை. ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து அவர்களை மண்ணுலகின்மீது குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குக் குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார். கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம். உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல, ‘நாம் அவருடைய பிள்ளைகளே.’

நாம் கடவுளுடைய பிள்ளைகளாய் இருப்பதால், மனிதக் கற்பனையாலும் சிற்ப வேலைத் திறமையாலும் உருவாக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப்போலக் கடவுள் இருப்பார் என நாம் எண்ணுவது முறையாகாது. ஏனெனில் மக்கள் அறியாமையில் வாழ்ந்த காலத்தில் கடவுள் இதனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது எங்குமுள்ள மக்கள் யாவரும் மனம் மாற வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார். ஏனென்றால் ஒரு நாள் வரும். அப்போது தாம் நியமித்த ஒருவரைக் கொண்டு அவர் உலகத்துக்கு நேர்மையான தீர்ப்பு அளிப்பார். இறந்த அவரை உயிர்த்தெழச் செய்ததன் வாயிலாக இந்நம்பிக்கை உறுதியானது என எல்லாருக்கும் தெளிவுபடுத்தினார்.”

‘இறந்தவர் உயிர்த்தெழுதல்’ என்பது பற்றிக் கேட்டதும் சிலர் அவரைக் கிண்டல் செய்தனர். மற்றவர்கள், “இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும்; கேட்போம்” என்றார்கள். அதன்பின் பவுல் அவர்கள் நடுவிலிருந்து வெளியே சென்றார். சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்களுள் அரயோபாகு மன்றத்தின் உறுப்பினரான தியோனிசியுவும் தாமரி என்னும் பெண் ஒருவரும் வேறு சிலரும் அடங்குவர். இவற்றுக்குப் பின்பு பவுல் ஏதென்சை விட்டுக் கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment