நவம்பர் 1 : முதல் வாசகம்
பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 2-4, 9-14
கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வான தூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து, “எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்” என்று அவர்களிடம் கூறினார். முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப் பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.
இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக் குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள். அவர்கள், “அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது” என்று உரத்த குரலில் பாடினார்கள்.
அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டு இருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள். “ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்” என்று பாடினார்கள்.
மூப்பர்களுள் ஒருவர், “வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?” என்று என்னை வினவினார். நான் அவரிடம், “என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன்.
அதற்கு அவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment