Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, July 9, 2023

ஜூலை 10 : முதல் வாசகம்நிலத்தில் ஊன்றியிருந்த ஓர் ஏணியின் நுனி, மேலே வானத்தைத் தொட்டுக்கொண்டு இருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 28: 10-22a

ஜூலை 10 :  முதல் வாசகம்

நிலத்தில் ஊன்றியிருந்த ஓர் ஏணியின் நுனி, மேலே வானத்தைத் தொட்டுக்கொண்டு இருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 28: 10-22a
அந்நாள்களில்

யாக்கோபு பெயேர்செபாவிலிருந்து புறப்பட்டு, கரானை நோக்கிச் சென்றான். அவன் ஓரிடத்திற்கு வந்தபோது கதிரவன் மறைந்துவிட்டான். எனவே அங்கே இரவைக் கழிப்பதற்காக அவ்விடத்தில் கிடந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலைக்கு வைத்துக்கொண்டு, அங்கேயே படுத்து உறங்கினான்.

அப்போது அவன் கண்ட கனவு இதுவே: நிலத்தில் ஊன்றியிருந்த ஓர் ஏணியின் நுனி மேலே வானத்தைத் தொட்டுக்கொண்டு இருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர். ஆண்டவர் அதற்கு மேல் நின்றுகொண்டு,

“உன் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கின் கடவுளாகிய ஆண்டவர் நானே. நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உனக்கும் உன் வழிமரபிற்கும் தந்தருள்வேன். உன் வழிமரபோ நிலத்தின் மணலுக்கு ஒப்பாகும். நீ மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் பரவிச் செல்வாய். உன்னிலும் உன் வழிமரபிலும் மண்ணுலகின் எல்லா இனங்களும் ஆசி பெறுவன. நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாய் இருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டேன்” என்றார்.

யாக்கோபு தூக்கம் தெளிந்து, “உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்; நானோ இதை அறியாதிருந்தேன்” என்று அச்சமடைந்து, “இந்த இடம் எவ்வளவு அச்சத்திற்குரியது! இதுவே இறைவனின் இல்லம், விண்ணுலகின் வாயில்” என்றார். பிறகு யாக்கோபு அதிகாலையில் எழுந்து, தலைக்கு வைத்திருந்த கல்லை எடுத்து, நினைவுத் தூணாக அதை நாட்டி, அதன் மேல் எண்ணெய் வார்த்து, ‘லூசு’ என்று வழங்கிய அந்த நகருக்குப் ‘பெத்தேல்’ என்று பெயரிட்டார்.

மேலும் அவர் நேர்ந்துகொண்டது: ‘கடவுள் என்னோடிருந்து நான் போகிற இந்த வழியில் எனக்குப் பாதுகாப்பளித்து உண்ண உணவும், உடுக்க உடையும் தந்து, என் தந்தையின் வீட்டிற்கு நான் நலமுடன் திரும்பச் செய்வாராயின், ஆண்டவரே எனக்குக் கடவுளாக இருப்பார். மேலும், நான் நினைவுத் தூணாக நாட்டிய இந்தக் கல்லே கடவுளின் இல்லம் ஆகும். மேலும், நீர் எனக்குத் தரும் யாவற்றிலும் பத்தில் ஒரு பங்கு உமக்குச் செலுத்துவேன்.'

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment