Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, July 7, 2023

ஜூலை 8 : முதல் வாசகம்யாக்கோபு தன் சகோதரனை வஞ்சித்து, அவனுக்குரிய ஆசியைக் கவர்ந்து கொண்டான்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 27: 1-5, 15-29

ஜூலை 8 :   முதல் வாசகம்

யாக்கோபு தன் சகோதரனை வஞ்சித்து, அவனுக்குரிய ஆசியைக் கவர்ந்து கொண்டான்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 27: 1-5, 15-29
ஈசாக்கு முதிர்ந்த வயதை அடைந்தபோது அவர் கண்களின் பார்வை மங்கிப்போயிற்று. அவர் தம் மூத்த மகன் ஏசாவை அழைத்து, ‘என் மகனே’ என்றார்; ஏசா, ‘இதோ வந்து விட்டேன்’ என்றான். அவர் அவனை நோக்கி, “இதோ பார்; எனக்கு வயதாகிவிட்டது. சாவு எந்நாள் வருமோ என்று அறியேன். இப்பொழுது உன் கருவிகளான வில்லையும் அம்புக் கூட்டையும் எடுத்துக்கொள். காட்டுக்குப் போ. வேட்டையாடி, எனக்கு வேட்டைக் கறி கொண்டுவா. நான் விரும்பும் முறையில் சுவையான உணவு வகைகளைச் சமைத்து என்னிடம் கொண்டு வா. நான் அவற்றை உண்பேன். நான் சாகுமுன், உனக்கு மனமார ஆசி வழங்குவேன்” என்றார்.

ஈசாக்கு தம் மகன் ஏசாவிடம் பேசியதை ரெபேக்கா கேட்டுக் கொண்டிருந்தார். வேட்டையாடி வேட்டைக்கறி கொண்டு வருமாறு ஏசா காட்டிற்குப் புறப்பட்டவுடன் ரெபேக்கா தம்முடன் வீட்டில் வைத்திருந்த தம் மூத்த மகன் ஏசாவின் உடைகளில் சிறந்தவற்றைத் தம் இளைய மகன் யாக்கோபுக்கு உடுத்துவித்தார். அவன் கைகளையும் மிருதுவான கழுத்தையும் வெள்ளாட்டுக் குட்டிகளின் தோலால் மூடினார். அவர் சுவையான உணவு வகைகளையும், தாம் சுட்ட அப்பங்களையும் தம் மகன் யாக்கோபின் கையில் கொடுத்தார்.

அவனும் அவற்றைத் தன் தந்தையிடம் எடுத்துச்சென்று, ‘அப்பா’ என்று அழைத்தான். அவரும் மறுமொழியாக, ‘ஆம் மகனே, நீ எந்த மகன்?’ என்று கேட்க, யாக்கோபு தன் தந்தையிடம், “நான்தான் உங்கள் தலைப்பேறான ஏசா. நீங்கள் சொன்னவாறு செய்திருக்கிறேன். எழுந்து உட்கார்ந்து என் வேட்டைப் பதார்த்தங்களை உண்டு மனமார எனக்கு ஆசி வழங்குங்கள்” என்றான். ஈசாக்கு தன் மகனை நோக்கி, “மகனே! இது உனக்கு இவ்வளவு விரைவில் எப்படி அகப்பட்டது?” என்று கேட்க, அவன், “உம் கடவுளாகிய ஆண்டவரால்தான் எனக்கு இது நிகழ்ந்தது,” என்றான்.

ஈசாக்கு யாக்கோபிடம், “மகனே, அருகில் வா, நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா என்று நான் உன்னைத் தடவிப் பார்த்துத் தெரிந்துகொள்வேன்” என்றார். யாக்கோபு தன் தந்தை அருகில் வந்தான். ஈசாக்கு அவனைத் தடவிப் பார்த்து, ‘குரல் யாக்கோபின் குரல்; ஆனால் கைகளோ ஏசாவின் கைகள்’ என்றார். அவன் கைகள் அவன் சகோதரன் ஏசாவின் கைகளைப் போல் உரோமம் அடர்ந்தவையாய் இருந்ததால், அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. எனவே அவனுக்கு ஆசி வழங்கினார். மீண்டும் அவர் ‘நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா?’ என்று வினவ, அவனும் ‘ஆம்’ என்றான்.

அப்பொழுது அவர், ‘மகனே, உண்பதற்கு வேட்டைப் பதார்த்தங்களைக் கொண்டு வா. மனமார நான் உனக்கு ஆசி வழங்குவேன்’ என்றார். அவ்வாறே யாக்கோபு கொண்டுவர, அவர் அதை உண்டார். பின், அவன் திராட்சை ரசம் கொண்டுவர, அவர் அதைக் குடித்தார். அப்பொழுது அவன் தந்தை ஈசாக்கு அவனை நோக்கி, ‘மகனே, அருகில் வந்து என்னை முத்தமிடு’ என்றார். அவனும் அருகில் போய் அவரை முத்தமிட, ஈசாக்கு அவன் அணிந்திருந்த ஆடைகளின் நறுமணத்தை முகர்ந்து ஆசி வழங்கி உரைத்தது இதுவே:

“இதோ, என் மகனிடமிருந்து எழும்பும் நறுமணம்! ஆண்டவரின் ஆசிபெற்ற விளை நிலத்தின் வாசனையாம்! வானின் பனித் துளியும், மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திராட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக! நாடுகள் உனக்குப் பணி புரிந்திடுக! மக்கள் உனக்குப் பணிந்திடுக! உன்றன் சோதரர்க்குத் தலைவன் நீ ஆகிடுவாய்! உன் அன்னையின் மைந்தர் உன்னடி பணிந்திடுவர்! உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக! உன்னை வாழ்த்துவார் வளமுற வாழ்க!” என்று ஆசி வழங்கினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment