ஜூலை 23 : முதல் வாசகம்
பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்.
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
“நீ சென்று எருசலேம் நகரினர் அனைவரும் கேட்கும் முறையில் இவ்வாறு பறைசாற்று. ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இளமையின் அன்பையும் மணமகளுக்குரிய காதலையும் விதைக்கப்படாத பாலை நிலத்தில் நீ என்னை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நான் நினைவுகூர்கிறேன். இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது; அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது; அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்; அவர்கள் மேல் தீமையே வந்து சேர்ந்தது, என்கிறார் ஆண்டவர்.
செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்; எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்கு உள்ளாக்கினீர்கள். குருக்கள், ‘ஆண்டவர் எங்கே?’ என்று கேட்கவில்லை; திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை; ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்; இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர்.
வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்; அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர். ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்: பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்; தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைத் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக